Friday, July 17, 2015

அந்திமழை,


கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ.
பரபரப்பான கிராமத்தின் கதை


இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது.


அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள்.


இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே அல்ல என்கிறார் முன்னுரையில் நாவலாசிரியர்.கிழக்கிலங்கையின் பள்ளிமுனை என்ற குக்கிராமத்தில் வசிக்கும் முத்து முகமது, அவனது காதலி மைமூனா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாங்கித் தருபவனான சப்பு சுல்தான் உள்ளிட்ட பல பாத்திரங்கள். காதலியை அவளது அம்மா வெளிநாட்டுக்கு அனுப்ப முயலுகையில் மைமூனா என்ற அப்பாவிப்பெண் பாலியல் மீறலுக்கு உள்ளாக்கப்பட்டு வெளிநாடு சென்று முத்துமுகமதுவுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்கிறாள்.


இதற்கிடையில் கிராமத்து எளிய இளைஞனான முத்து முகமது இஸ்லாமிய அரசியல் தலைவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் உயிரையும் காப்பாற்றி, அவரலால் அரசியலில் உயர்த்தப்படுகிறான்.


தமிழகத்தில் இக்கதை எழுதப்பட்டிருக்குமானால் அந்த அரசியல் வாதியும் கெட்டவராகக் காட்டப்பட்டிருப்பார். ஆனால் இக்கதையில் அவர் கடைசிவரை முத்துமுகமதுவைக் கைவிடாதவராக, அவனுடைய வாழ்க்கையில் போருதவி செய்பவராகக் காட்டப்படுகிறார்.


கொழும்பு நகருக்கு முதல்முதலாகச் செல்லும் முத்துமுகமது சிங்களம் தெரியாமல் வழி தவறி அவஸ்தைப் படும் காட்சிகள், அரசியலில் வளர்ந்து ஊருக்குத் திரும்பி பெரும்பதவிகளை ஏற்கையில் ஏற்படும் சூழல் மாற்றங்கள் என நாவலில் சிறப்பான பகுதிகள் உள்ளன.

நாவலைப் படித்து முடித்தபின்னரும் தாரே நக்பீர் என்ற முழக்கம் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

நன்றி: அந்திமழை, 1/4/2014.


பரபரப்பான கிராமத்தின் கதை 



Add caption

No comments:

Post a Comment