கொல்வதெழுதுதல் 90 ...
யதார்த்தத்தின் உயிர்ப்பு
ஏ.பீர்முகம்மத்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖
கண்ணிவெடி¸ குண்டு வெடிப்பு¸ டயர் எரிப்பு¸ ஹர்த்தால்¸ ஆட்கடத்தல்¸ சுற்றி வளைப்பு என்று தொன்னூறுகளில் முஸ்லிம் பிரதேசமெங்கும் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பின்னணியில் போர்க்கால இலக்கியமாக அரசியல் பேச எழுந்ததுதான் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல்90 என்ற நாவலாகும். முஸ்லிம் குரல் என்னும் வாராந்த ஏட்டிலே பத்தொன்பது அத்தியாயங்கள் கொண்டதாக 2003 இல் தொடராக வெளிவந்தது. பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்நாவல் 2013 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் கொல்வதெழுதுதல்90 என்ற தலைப்பில் நூலுருப் பெற்றது.
தொன்னூறுகளின் முஸ்லிம் அரசியலைப் பேசிய இந்நாவலின் கதைச் சுருக்கம் இதுதான்.
கதையின் நாயகன் முத்துமுகம்மது. விடுதலைப் போராட்டக் குழுக்களின் கெடுபிடி நடவடிக்கைகளைக் கண்டும் கேட்டும் திரிந்த இளைஞன். இலங்கை இஸ்லாமியக் கட்சியின் நடவடிக்கைகளால் கவரப்பட்டவன். தனக்கிருந்த மலேசிய வாசுதேவன் குரலைப் பயன்படுத்தி பாடல்களை அரசியல் கூட்டங்களில் பாடி வந்தான். இலங்கை இஸ்லாமியக் கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்த முத்து முகம்மது கட்சியின் இளைஞர் அணித் தலைவனாக நியமிக்கப்பட்டான். இதற்கிடையே தனது மாமி மகள் மைமூனாமீது தீராத காதல் கொண்டு எப்படியும் அவளைத் திருமணம் செய்யத் தீர்க்கமான முடிவெடுத்தான். மைமூனாவும் இணங்கியே இருந்தாள்.
மைமூனாவுக்கு வயசுக்கு வந்த மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.
மைமூனாவை அரபு நாட்டுக்கு அனுப்பி உழைத்தால்தான் தனது குடும்பம் உருப்படும் என்று கைம்பெண்ணான தாய் முடிவுக்கு வருகிறாள். அடிக்கடி வந்துபோன வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சப்பு சுல்தானும் இந்த முடிவுக்கு காரணமாகிறான்.
மைமூனா வெளிநாடு போகக் கூடாது என்று முத்து முகம்மது ஒற்றைக் காலில் நிற்க நிலைமையை அநுசரித்து மைமூனா வெளிநாடு போகிறாள். சப்பு சுல்தான் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றிக் கெடுத்தவன். மைமூனா பேசி முத்து முகம்மதுக்கு அனுப்பிய ஒலிநாடாவில் தன்னைக் கெடுத்த கதையையும் சொல்லியிருந்தாள். அரசியலிலும் முத்து முகம்மதின் எதிரி. எனவே சப்பு சுல்தானை கொலை செய்ய முயற்சிக்கிறான். இன்னுமொரு இளைஞனும் தனது தாயின் மரணத்துக்குக் காரணமான சப்பு சுல்தானை கொலை செய்யத் திட்டமிடுகிறான்.
சப்பு சுல்தானின் சடலம் புலிகள் கொலை செய்ததான கடிதத்தோடு ஆலமரத்தில் தொங்கியது. ஊரில் சிலர் சப்புவின் கொலைக்கு முத்து முகம்மதுவைச் சுட்டியே பேசத் தொடங்கினர் .ஆனால் இஸ்லாமிய கட்சித் தலைவர் எம்.எச்.எம்.இஸ்ஹாக் முன்னிலையில் முத்துமுகம்மது தன்னை நிரபராதி என நிரூபித்தான். உயிராபத்தில் இருந்து கட்சித் தலைவரைக் காப்பாற்றிய வேளையில் முத்து முகம்மது மூன்று கை விரல்களை இழந்தவன் என்பதனால் வயற்சேனை பிரதேச தவிசாளர் பதவியை தலைவரின் பரிசாகப் பெற்றவன். பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் நடவடிக்கைகளில் தலைவர் திருப்தி கண்டதனால் வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் முத்து முகம்மதுக்குப் பரிசாக வழங்கினார்.அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்த மைமூனாவை நாட்டுக்கு அழைத்து திருமணமும் நடத்தி வைத்தார்.
முத்து முகம்மது மைமூனா தம்பதிகள் ஊர் மக்களின் பலத்த வரவேற்புகளுக்கு மத்தியில் பள்ளிமுனைக் கிராமத்தில் வந்திறங்கினார்கள் என்று கதை முடிகின்றது.
கால வெளி
காலம் காலமாக ஒரே குட்டையில் ஊறிய கட்சிகளுக்கு புள்ளடி போட்டுப் பழக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களிடையே அரசியல் என்பது வேறு துருவம் நோக்கி நகரத் தொடங்கியது .ஆயுத கலாசாரம் ஒரு பக்கமும் இராணுவ நடவடிக்கை¸ இந்திய அமைதிப்படை என்று இன்னுமொரு பக்கமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசம் தொன்னூறுகளில் கொதிநிலையில் இருந்தது. இந்தச் சு10ழ்நிலையை நாவல் துல்லியமாகச் சொல்லி நகர்கின்றது. குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூலை முடுக்கெல்லாம் ஆதரவு திரளத் தொடங்கிய காலம்.தேநீர் கடைகளிலும் வீதிச் சுவர்களிலும் வீட்டு முகப்பிலும் ஒட்டப்பட்ட தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் என்று தனது வழமையான நகைச்சுவை கலந்த பாணியில் ஆசிரியர் இதனைப் பதிவு செய்கிறார்.
அரசியல் கூட்டங்களில் முஸ்லிம் பெண்கள் முதன்முதலாகப் பங்குபற்றத் தொடங்கிய காலமும் அதுதான். முத்து முகம்மது "பொன்மானைத் தேடி நான் பூவோடு வந்தேன்" என்று மலேசிய வாசுதேவன் குரலில் அரசியல் மேடையில் பாடியதும் அங்கிருந்தவாறே அவனது கண்கள் மைமூனாவை பெண்களுக்கு மத்தியில் தேடியதாகச் சொன்னதும் நாவலின் காலத்தைச் சுட்டி நிற்கின்றன.
நாவலில் நிரம்பி வழியும் பயனிலைச் சொற்கள் கதைநிகழ் காலத்தை குறி சுட்டுக் காட்டுகின்றன.
கள வெளி
பள்ளிமுனைக் கிராமத்தில் ஆரம்பிக்கும் நாவலின் களம் பூமரச் சந்தி¸ பசரிச்சேனை ¸பாலடி அவ்லியா சியாரம்¸நெய்னார் கடை¸ கொழும்பில் யூகே லொஜ்¸ தலைவரின் இல்லம் என்று தலைநகரம்வரை செல்கின்றது. "இலங்கையின் தேசப் படத்தில் பள்ளிமுனைக் கிராமத்தைத் தேடினால் காணமாட்டோம். இந்தப் போர்க் காலத்தில்கூட அடர்த்தியான மரத்தோப்புகளைப் போர்த்திக் கொண்டு இனம் புரியாத ஒரு அமைதியாகப் பசுமைக்குள் ஒளிந்திருந்தது பள்ளிமுனைக் கிராமம்" என்று நகர்கிறார் நாவலாசிரியர் ஆர்.எம்.நௌஸாத்.
பள்ளிவாசலும் மைதானத்துடன் கூடிய ஒரு முஸ்லிம் மகா வித்தியாலயமும் கிறவல் பாதைகளும் பள்ளிமுனைக் கிராமத்தின் அடையாளங்கள். பெரிய பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியாரிடம் மட்டுமே கொரளா கே.ஈ 20 கார் இருந்தது. முத்து முகம்மது செத்தைக் குடிசையில் வாழ்ந்தான்.
பாத்திர வெளி நாவலில் முத்து முகம்மது மட்டுமே முக்கிய பாத்திரம். மைமூனா. சப்பு சுல்தான்¸ இஸ்லாமியக் கட்சித் தலைவர் எம்.எச்.எம்.இஸ்ஹாக்¸ பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார்¸ நெய்னார்¸ தாடி மாஸ்டர்¸ மொட உதுமான்¸ தம்பி யாசின் என்று பல பாத்திரங்கள். நாவலில் கதாநாயகன் முத்து முகம்மது பின்வருமாறுதான் நமக்கு அறிமுகமாகிறான்.
பள்ளிமுனை இளைஞர் அணித் தலைவர் பதவியை அவன் பெற்றிராத காலம்.
“மேடையில் ஒரேயொரு ஆளாக முத்து முகம்மது நின்று கொண்டிருந்தான். தலையில் கட்சித் தொப்பி.மஞ்சள் பச்சை சேட்டுடன் கட்சிச் சாறன். கையில் புதிதாக கடிகாரம். மார்பில் தலைவரின் சிறிய படம்." "முத்து முகம்மது பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய கம்பீரமான குரல் வளம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது. அரசியல் மேடைகளிலும் வைபவங்களிலும் மலேசியா வாசுதேவனின் குரலிசையில் பாடுவதும் அறிவிப்பதும் அவனது சிறப்பம்சம் ..... பொழுதுபோக்கு தொழில் எல்லாமே ....." என்றுதான் முதலாவது அத்தியாயத்தில் ஆசிரியர் முத்து முகம்மதை அறிமுகம் செய்கிறார். கொழும்பிலே தலைவருடன் சில காலம் தங்கிய முத்து முகம்மது பல மாற்றங்களை தன்னுள் உள்வாங்கிக் கொண்டான்.
இதுபற்றியும் நாவல் நமக்குச் சொல்கிறது. "இப்போதெல்லாம் சிங்களம் இயல்பாகவே விளங்கியது.ஆங்கிலம் கூடக் கொஞ்சமாய் பேசவும் முடிந்தது.தலைநகரின் வீதிகளும் சந்து பொந்துகளும்கூடப் பரிச்சயமாயின. கட்சி அலுவலகம்¸ பாராளுமன்றம்¸வங்கி¸பொலிஸ்நிலையம்¸தொலைபேசி¸தொலைமடல்¸அரசஅதிகாரிகள்¸ஏசி¸காலி முகத்திடல்¸ரூபவாஹினி¸ஊனக் கைகளால் பஜ்ரோ வாகனம்கூட ஓட்ட¸ எல்லாம் பழக்கமாகின. முத்து முகம்மதின் பள்ளிமுனைக் கிராமத்தனம் பூரணமாகத் தொலைந்து விட்டிருந்தது. அவனுக்குள் ஒரு நகர இளைஞன் உருவாகி இருந்தான்"
நாவலின் இறுதி அத்தியாயத்தின் இறுதிப் பந்தி இது. “வாகனத்தின் கதவுகளை ஒரு பொலிஸ்காரன் பவ்வியமாகத் திறந்துவிட¸ நெருக்கியடித்த சனங்களை அதிரடிப்படை வீரர்கள் தள்ளி வழி சமைக்க¸ வாகனத்திலிருந்து தனது இளம் மனைவி சகிதமாக இறங்கி வந்து கொண்டிருந்தார். இலங்கை இஸ்லாமியக் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பள்ளிமுனை இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளரும் தற்போதைய திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜனாப் எம்.முத்து முகம்மது அவர்கள் ........ "நாரே தக்பீர் " “அல்லா{ஹ அக்பர்"
முத்து முகம்மதின் முழுமையான ஆளுமை இவ்வாறுதான் நாவலில் மேற்கிளம்பியது. நாவலின் ஒரே முழுமையான பாத்திரம் முத்து முகம்மதுதான்.ஏனையவை துணைப் பாத்திரங்களே.
புனைவு மொழி
நாவலில் ஆசிரியரின் மொழிப் பிரயோகத்திலும் கதாபாத்திரங்களின் பிரதேச பேச்சுமொழி வடிவமே மேலோங்கிக் காணப்படுகிறது. அதனையும் உயிர்ப்புடன் எழுதும் வல்லமை ஆசிரியருக்கு சித்தித்துள்ளது
முஸ்லிம் அரசியலின் இயலுமை பாமரத்தனத்தில் அல்லது படிப்பறியாத மக்களின் கைகளில் தொன்னூறுகளில் இருந்துள்ளது என்பதை நாவல் கோலம் போட்டுக் காட்டியுள்ளது. அக்காலத்திய அரசியல் அப்படித்தான் இருந்தது. யதார்த்தத்தையே நாவல் பேசியுள்ளது.
நூலின் நுழைவாயிலில் கிடந்த சுருக்கெழுத்து என்ற நாவலாசிரியரின் குறிப்பிலே யாவும் கற்பனையுமல்ல யாவும் நிஜமுமல்ல என்ற வாசகம் இதனையே ருசுப்படுத்துகின்றது.
தீரன் ஆர்.எம். நௌசாத்தின் நட்டுமை(2007)¸கொல்வதெழுதுதல்90(2013)ஆகிய இரண்டு நாவல்களும் கதை நிகழ்காலத்தை சேதாரமில்லாமல் முன்வைக்கின்றது. காலத்தை கலவரப்படாமல் செப்பமாகக் காட்டும் நாவல்களே வெற்றி பெறுகின்றன. கள வெளி¸ பாத்திரவார்ப்பு¸ புனைவு மொழி¸ மானிட வாழ்வியல்¸ கலாசாரம் மற்றும் பண்பாடுகளின் பிரசன்னம்¸ கற்பனையிலும் யதார்த்தம் மேலோங்கியிருத்தல் போன்ற நாவலின் கூறுகளை பெருமளவில் சிறப்பாகக் கையாண்டமையால் இரண்டு நாவல்களும் பலராலும் பேசப்பட்டன. நட்டுமையின் கனதி கொல்வதெழுதுதல்90 இலும் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இரண்டு நாவல்களிலும் குறிப்பாக நட்டுமையில் கலாசார பண்பாட்டுக் கூறுகள் வெளிப்பட்ட அளவுக்கு விவசாயக் குடிகளின் சமூகம் சார்ந்த வாழ்வியல் பேசப்படவில்லை என்பது நட்டுமையின் செழுமையில் மறைந்து போகின்றது.
இன்னும் பல புதினங்கள் ஆர்.எம் .நௌஸாத்திடமிருந்து வெளிவர வேண்டுமென்பதே தமிழிலக்கியத்தின் தேவையாகும்.00
No comments:
Post a Comment