Saturday, October 9, 2021
Monday, May 17, 2021
Thursday, April 22, 2021
Friday, April 16, 2021
Monday, April 12, 2021
சப்ரி..ஏறாவூர்
அற்புதமான மொழிநடை கொண்ட நாவல்.
ஏறாவூர் சப்ரி
தீரன். ஆர்.எம் நௌஷாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 வாசிக்கக் கிடைத்தது. இந்நாவலை காலச்சுவடு பதிப்பித்திருந்தது. 2003 காலப்பகுதியில் முஸ்லிம் குரல் பத்திரைகையில் தொடராக வெளிவந்திருந்தது. ஏலவே நட்டுமை நாவலும் வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து பல விருதுகளைப் பெற்றிருந்தது.
1990 களில் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமங்களில் தலைவிரித்தாடிய அட்டூழியங்களின் சிறு பகுதியை சுவாரஷ்யமான தனது எழுத்தினால் ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பேச்சு வழக்கும் மக்களின் உணர்வு பூர்வமான எண்ணங்களையும் கருவாகக் கொள்கிறார். எமது அரசியலின் ஆரம்பப் பரிமாணங்களை அப்படியே ஒப்புவித்து வெற்றியும் கண்டுள்ளார். அழகான கிராமிய மனம் கமழும் காதலையும் நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது.
தெகிட்டாமல் ஒரே மூச்சில் வாசித்துவிடக் கூடிய அற்புதமான நாவல்களில் கொல்வதெழுதுதல் 90 ம் ஒன்றென்று சொன்னால் மிகையில்லை.
முத்து முஹம்மது எனப்பட்ட கிராமத்து இளைஞனின் வாழ்வில் இடம்பெறும் அன்பு மற்றும் அரசியல் நகர்வுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் இல்லையெனினும் ஒவ்வொரு வாசகனும் வாசித்து பயன்பெறக் கூடிய அற்புதமான மொழிநடை கொண்ட நாவல்.
வாசியுங்கள் நிச்சயம் உங்கள் மனதில் அது ஒரு மூலையிலாவது அப்பியிருக்கும்.
Mohamed Sabry
Thursday, April 8, 2021
அஷ்ரப் சிஹாப்தீன்
அஷ்ரப் சிஹாப்தீன்
பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது.
அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.
“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
Monday, March 22, 2021
மாணாமக்கீன்
கிழக்கிலங்கையிலும் ஒரு 'தோப்பில் முகம்மது மீரான்'!
மானாமக்கீன்
**************
சமீப காலத்தில் படு படு வேகமாக ஒரு நாவலைப் படித்தேன் என்றால் 'கொல்வதெழுதல்-90' ஒன்று மட்டுமே! (தமிழகக் காலச்சுவடு பதிப்பு 2013.மீள் பிரசுரம் 2017. ஆரம்பத்தில் 2003-ல் பெளஸர்-நூறுல் ஹக் ஆசிரியர்களாக வெளியிட்ட "முஸ்லிம் குர"லில்).
தன் ஆரம்பகால எழுத்துகளுக்கு ஏணிப்படி' -என என்னை வர்ணிக்கும், கிழக்கிலங்கை, சாய்ந்தமருது தீரன் R.M. Nowsaathத்திற்குள் 'ஒரு தோப்பில் முகம்மது மீரான் உள்ளார் என்பதை இந்நாவலை 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நேற்று வாசித்த பிறகே உணர்ந்தேன்.
தமிழக எழுத்தாளர்கள் - குறிப்பாக முஸ்லிம் படைப்பாளிகள்- இதைப் பார்வையிடல் "காலத்தின் கட்டாயம்".(சில சமயங்களில் தோப்பிலுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவும் எட்டிப்பார்க்கிறார்!).
Tuesday, March 2, 2021
கே.முஹம்மத் சுஐப்
அச்சுப் பிசகாமல் அதே மொழிநடையில்...கொல்வதெழுதுதல் -90.
கே.முஹம்மத் சுஐப்...தமிழ்நாடு
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கிழக்கிலங்கை இஸ்லாமிய மக்களின் துயர வாழ்க்கையையும்...போரினால் அவர்கள் பட்ட துயரத்தையும் ..அவர்களை பிரதிநிதப்படுத்தும் அரசியலாரின் அவலங்களையும் ஒருங்கே சொல்லும் கதை..
பள்ளிமுனை (அப்படி ஒரு கிராம் இருக்கிறதா..?கற்பனையா ..?ஆசிரியரே..?) கிராமத்துக்கு இஸ்லாமியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்..தலைவர் எம் எச் எம் இஸ்ஹாக்கின் வருகையை ஒட்டி ஆரம்பிக்கும் கோலாகலத்தோடு ஆரம்பமாகும் நாவல்...அதே கிராமத்துக்கு இஸ்ஹாக்கின் தொண்டன் முத்து முகம்மது அதே பாராளுமன்ற உறுப்பினரக திரும்புதலோடு நாவல் முடிகிறது..
எல்லாக் கட்சிகளிலும் இருக்கும் இருக்கும் அப்பாவித் தொண்டனைப் போலவே முத்து முகம்மதும் இஸ்லாமியக் கட்சியின் தொண்டனாக இருக்கிறான்...
அவன் காதல்வயப்படும் மைமூனாவுடன் மைமூனாவின் சவூதி பயணத்திற்காக அவளது தாயுடனும்..தம்பியுடனும் கொழும்பு பயணிக்கிறான்..சப்பு சுல்தான் என்ற ஒரு அயோக்கியனை சவூதி ஏஜெண்டாகக் கொண்டு சவூதி புறப்படும் தயாராகும் மைமூனாவின் சொந்த பாதுகாவலுக்காகவே அவர்களுடன் முத்து முகம்மதும் கொழும்பு பயணிக்கிறான்...
ஆனால் பெண் பித்தனான சப்பு சுல்தான் ஒரு பொய்யைச் சொல்லி முத்து முகம்மதையும் மைமூனாவின் தம்பி யாசினையும் தலைவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் மைமூனாவை மயக்க மருந்து கொடுத்து அனுபவித்து விடுகிறான்..
-இதெதல்லாம்...சவூதிக்குச் சென்ற பிறகு அங்கிருந்து மைமூனா பேசி அனுப்பும் கெசட் வழியாகத்தான் முத்து முகம்மதுக்கு தெரிய வருகிறது..அதிலிருந்த சப்பு சுல்தான் மீது முத்து முகம்மது வன்மம் கொள்கிறான்...பணம்..ஆயுதம்...இயக்க உதவிகள் என அலைந்து திரியும் சப்புசுல்தான நெருங்குவது அவ்வளவு எளிதல்ல..!
இதற்கிடையே கொழும்பில் தலைவர் வீட்டில் தங்கும் முத்து முகம்மது தலைவரோடு வெளியே செல்லும் போது நடைபெறும் ஒரு துப்பாக்கிச் சூட்டில் தலைவரை் காப்பாற்றப் போக அவனது நாலுவிரல்களை இழக்கிறான்.தலைவர் ஆச்சர்யமாக உயிர்தப்புகிறார்...!!
அந்த நன்றிக் கடனுக்காக முத்துமுகம்மதை தலைவர் பள்ளிமுனை பிரதேசச்சபை செயலாளராக்குகிறார்..
மறுபடியும் அதிகாரத்தோடு பள்ளிமுனை திருமபும் முத்து முகம்மது சவூதி சென்ற தன் ப்ரியத்துக்குரிய மைமூனாவையும் மறக்கவில்லை.அவளை வஞ்சகம் செய்த சப்பு சுல்தானையும் மறக்கவில்லை.
நாவல் முழுக்க கிழக்கிலங்கை பேச்சுத் தமிழில் அழகாகாகப் பயணிக்கிறது...அதுவும் ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் பேச்சுத் தமிழை நவ்சாத் அச்சுப் பிசகாமல் அதே மொழி நடையோடு எழுதி இருக்கிறார்...நாவல் முழுக்க ஒரு கிண்டல் தொனி தெரிகிறது...
நான் இலங்கை தமிழ் முஸ்லி்ம்களை அவர்களது முன்னொட்டு பட்டவெறிக்காக எப்பவும் கிண்டல் பண்ணுவேன்..(கவி பூஷணம்...கவி ரட்னம்..அமுதக் கவி...இப்படி...எக்ஸ்ட்ரா...எக்ஸட்ரா...)
அதையே இந்நாவலில் நவ்ஷாத்தும் குறையின்றி செய்திருக்கிறார்...புரட்சி மௌலவி புழைல்...பள்ளிக்குயில் பளீல்...ஆசு கவி ஆப்டீன்...இப்படி பலரையும் இலங்கை இஸ்லாமியர்களுக்கே உரிய பட்ட வெறியை உயரிய நயத்தோடு கேலி பண்ணுகிறார்..ஏன் நாவலின் கதாநாயகன் முத்து முகமதுவையே அவர் கிண்டல் பண்ணத் தவறவில்லை.மளேசியா வாசுதேவன் பாடலை அடிக்கடி அதே குரலி்ல் பாடுவதால் அவனையும் கேலி பண்றார்..
சரி...இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களிடையே இந்த நாரே தக்பீர்...அல்லாஹூ அக்பர் என கோஷமிடும் பழக்க மிருக்கிறதா...?
அதைப் போலவே அங்கு தலைவர்களின் காலில் விழுந்து வணங்கும் பழக்கமும் இருக்கிறதா...? அதுவும் முஸ்லி்கள்...?முஸ்லிம் தலைவர்கள் கால்களிலேயே...?
இது நாவலில் ஆங்காங்கே சரளமாக வருகிறது...நம்ப மனம் மறுக்கிறது.அல்லது...தமிழக அரசியலை பகடி பண்ணும் நோக்கோடு நவ்சாத் இதை நாவலில் எழுதினாரா..?அவரே விளக்கினால் நன்றாக இருக்கும்...!
நாவலில் தலைவர் என நவ்ஷாத் வர்ணிக்கும் அந்தப் பாத்திரம் (எம் எச் எம் இஸ்ஹாக் ) முன்பு இலங்கையில் முஸ்லிம்களின் பெருவாரி ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்த மர்ஹூம். அஸ்ரபின் சாயலையும் ஒத்திருக்கிறது.
இதனாலும் மேற்கண்ட கேள்விகளின் முக்கியத்துவம் கூடுகிறது.
மைமூனாவின் கெசட்டால் பாதிக்கப்பட்ட முத்து முகம்மது சப்பு சுல்தானின் கதையை முடிக்க எண்ணுகிறான்...ஆவேசம அவன் உடல் முழுக்க ரத்தச் சூடு மாதிரி பரவுகிறது..
இதற்கிடையே சப்பு சுல்தானின சில கேடு கெட்ட செயலுக்காக புலிகளும் அவனைக் குறி வைக்கின்றனர்...
ஒரு நாள் நள்ளிரவு சப்பு சுல்தானின் ஆயுளை முடிக்கும் நோக்கோடு முத்துமுகம்மது அவனது வீட்டுக்குச் செல்ல...அவனுக்கு முன்பே சப்பு சுல்தானின் கதையை புலிகள் முடித்து விட்டுச் சென்றதை அறிந்து முத்து முகம்மது பதட்டமடைகிறான் ..எப்படியோ ஒரு கயவனின் கதை முடிந்து விட்டது.
நாவல் இங்கு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால்...சப்பு சுல்தானை முத்து முகம்மதுவே கொன்று விட்டான் என தலைவருக்கு செய்தி போகுது...
தலைவர் அவனை கூப்பிட்டு விசாரிக்கவே முத்து முகம்மது மைமூனாவுக்கு கொழும்பு யூ.கே லாட்ஜில் நடந்த சம்பவம் முதற்கொண்டு தான சப்பு சுல்தானைக் கொல்லப போன விஷயம் வரை எலலாவற்றையும் விவரமாக ஔிவு மறைவின்றிச் சொல்கிறான்...தலைவரும் அதை உளமார நம்புகிறார்..
முன்பு நடந்த ஒரு தேர்தற் பிரச்சினையில் "இன்னது நடக்கவில்லை என்றால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வேன்..." என பொதுக்கூட்ட மேடையில் சவால் விட்டிருந்தது தலைவருக்கு திடீரென ஞாபகம் வரவே தனது பதவியை ராஜினாமாச செய்ய இதுவே தருணமென்று முடிவெடுத்து ராஜினாமாச் செய்து முன்பு தனது உயிர்காத்த இடத்தில் முத்து முகம்மதுவை அந்த காலி இடத்திற்கு எம் பியாக்குவதோடு நாவல் நிறைவு பெறுகிறது..!!
ஆக...ஒரு சாதாரண அப்பாவித் தொண்டன் இங்கு எம்பியாக உயர்கிறான்...!
இதனால்....நாவலின் கடைசிப் பகுதி சற்று நாடகத் தன்மையோடு முடிவு பெறுவது மாதிரித் தெரிகிறது .இதை நவ்சாத் தவிர்த்திருக்கலாம்...
மற்றபடி கிழக்கிலங்கையின் ஒரு அரசியல் நாவல் என இதைக் கொள்ளலாம்.
ஒரு ஓப்பீட்டில் பார்த்தால் ..தமிழக அரசியலுக்கும் இலங்கை அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை...தலைவர் எம்பி பதவியை ராஜினாமாச் செய்வது ஒன்றைத் தவிர....!!!
(இங்கே சாகக் கிடந்தாலும் எவனும் பதவியை ராஜினாமாச் செய்வதில்லை..)மிக எளிய தமிழில் சிக்கலின்றி எழுதப் பட்டிருக்கும் நல்ல நாவல்.
தீரன் நவ்ஷாதுக்கு நமது பாராட்டுக்களும் .வாழ்த்துக்களும்..!!!
R.M. Nowsaath
#காலச்சுவடு_பதிப்பகம்
#நாகர்கோவில்
ஹனீஸ் முஹம்மத்
ஒரே ஒரு குறைதான்.....
ஹனீஸ் முஹம்மத்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நாவல்- "கொள்வதெழுதல் 90"
நாவலாசிரியர்- தீரன் R.M.நெளஷாத்.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்(இந்தியா)
#போராளிகளே_புறப்படுங்கள்
நம் புத்தக அடுக்குகளிலுள்ள சில புத்தகங்கள் வாசிக்கும் வரை நம் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படி என்னை வாசிக்கும்வரை தொடர்ச்சியாக உறுத்திக் கொண்டிருந்த புத்தகம்தான் "கொள்வதெழுதல் 90".
இந்நாவலை வாசித்தும் ஒரு வருடத்தை அண்மித்திருந்தாலும், இப்போதும் அதன் காட்சி படிமங்கள் இன்னமும் மனதில் நிற்கின்றது. அதுவே நாவலின் ஆழத்தை காட்டுகின்றது. அதனடிப்படையில் தான் இப்போது இந்த குறிப்பை பதிவிடுகிறேன்.
நாவலாசிரியர் தீரன் RM.நௌஷாத் இன் "வல்லமை தாரயோ..!" முதல் சிறுகதை தொகுப்பாகும்.
எழுத்தாளர் சுந்தர் ராமசாமியின் 75, பவள விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற "நட்டுமை" நாவல், இலங்கை அரசின் தேசியசாகித்திய விருதை பெற்ற "வெள்ளி விரல்" சிறுகதை தொகுதிகள் பேசும்படியாக இருக்கின்றது.
"கொள்வதெழுதல் 90" நாவலானது, பெரும்பான்மையின் நசுக்குதலுக்கு உள்ளான தமிழ் சமூகம், அவர்களின் விடுதலைக்காக போராட எழுந்த போராட்ட குழுக்கள், மூன்றவாது சிறுபான்மையான முஸ்லிம்களை அவர்கள் ஒடுக்க முற்பட்ட போது கிளர்ந்த மனவலைகளின் அடிப்படையிலும்,
1985 பிற்பட்ட காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை சூழ்ந்த பயங்கர கோரத்தையும், போரியல் தடங்களையும், தந்களுக்கான ஒரு தலைமை, தங்களுக்கான ஒரு கட்சி என்ற அரசியல் சித்தாந்தம் படிந்த அப்போதைய முஸ்லிம்களின் மனநிலையை அச்சொட்டாக பதிவு செய்திருக்கின்றார் நாவலாசிரியர்.
பள்ளிமுனை கிராமத்தில் முஸ்லிம் கட்சியின் தலைவரின் கூட்டத்தின் ஏற்பாடுகளும், அவ்கட்சியின் தீவிர போராளியான முத்துமுகம்மது, மைம்னா காதலிருந்தும் கதை ஆரம்பிக்கின்றது,
"தலைவர் வருகையை ஐம்பத்து நான்காவது தடவையாக ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்யும் முத்துமுகம்மது".
போராளிகளே புறப்படுங்கள்" என்ற கோஷங்கள், பூவரச மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் தலைவரின் படங்கள், வர்ண கொடிகள்.
நாவலானது வாழ்வில் பொறுப்புகளை சுமந்திருக்கின்ற ஒரு பெண்ணின் "மைம்னா" வின் வாழ்வியல் துன்பமும், அப்போதைய சமூக வறுமை நிலையையும், முத்து முகம்மதினதும் மைம்னாவின் காதலும், தலைவர் இஷாக் இனதும், முத்துமுகம்மதின் அரசியல் எழுச்சியும். இவைகளை மைய்யப் புள்ளியாக வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாவலில் வறுமையின் காரணமாக பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களை 'சப்பு' என்று அழைக்கும் தரகர்கள் எப்படியெல்லாம் மோசடி செய்தார்கள், என்பதை நாவலாசிரியர் மைம்னாவை அடைவதற்காக அந்த சப்பு எப்படியெல்லாம் திட்டம் தீட்டி, லொட்ஜில் வைத்து வன்புணர்வு செய்கின்றார் என்பதனூடாக சமூகத்தை விழிப்புணர்வு செய்திருக்கின்றார்.
இவற்றுக்கிடையில் அப்போதுகளில் நடந்த அதிகார அத்துமீறல்கள், அடையாளமற்ற கொலைகள், குத்துவெட்டுக்கள்.
நாவலில் வரும் ஒவ்வொரு சம்பாசனைகளும், பேச்சு வழக்கும், மற்றும் காட்சியமைப்புகளும் நவலாசரியரின் கதை சொல்லும் திறனை அளவிட்டிற்கு அப்பால் கொண்டு செல்கிறது. இப்பகுதியில் வசிப்பாவனாக நானிருப்பதால் ஒவ்வொரு வரிகளிலும், ஹாஜியாரின் திண்ணையிலும், நெய்னாவின் டீக்கடையிலிருந்து அரசியல் அலசும் வித்துவான்களின் ஒருத்தனாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக 'போராளிகளே புறப்படுங்கள்' என்ற கோசம் ஒலிக்கும் போதும், தலைவர் இஷாக் பேசும்போது மாபெரும் கூட்டத்தில் நானும் ஒரு முகமாக மெய்சிலிர்த்து போனேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப தீவிர போராளியான எனது மாமாவை இக்கதையின் பல இடங்களில் பொருத்தி பார்த்துக் கொண்டேன். தன்னிடமிருந்த இளமை, தைரியம், பொருள், அனைத்தையும் தியாகித்தது மட்டுமல்லாமல், உயிர் அச்சுறுத்தல், இரண்டு தடவைகள் புலிகளின் சித்திரவதைகள், தலைமறைவு.
துரதிஸ்டவசமாக இன்னுமே போராளியாக தான் இருக்கின்றார். அவரைப் போல எத்தனையோ பேர்கள் இன்னுமே அதே நிலைமை தான் இருக்கிறார்கள். முத்துமுகம்மதை போன்று சேர்மனாகி, எம்பி ஆவது எல்லாம் கதைகளிலும் திரைப்படங்களிலும் தான் நடைபெறும்.
நாவலில் காணப்படும் பெரும்பாலான சம்பவங்களில் கதைகளும் அப்போதைய நடைபெற்ற அரசியல் மற்றும் போரில் சம்பவங்களின் உண்மை தன்மையை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டதாக இருக்கின்றது.
இந்த நாவலை தலைவர் மீது மக்கள் வைத்திருந்த அன்புக்கு காத்திரனமானாதாகவும், அப்போதய சம்பவங்களின் ஒரு ஆவணப்படுத்தலாகவும் எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய நமது தொடுதிரை சந்ததியினர் இந்த நாவலையாவது கட்டாயம் வாசிக்க வேண்டும். இந்த நாவல் ஒட்டிய உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும்.
"போராளிகளே புறப்படுங்கள்... ஓரத்தில் நின்றுகொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை... ஆலமரமாய் நம் சமூகம் வாழ வேண்டும், அதை வாழ்விக்க புறப்படுங்கள்."
ஒரே ஒரு குறைதான்,"மச்சான்... மச்சான்..." என்று மண் மணக்கும் மைம்னாவின் காதலை தொடர்ந்து நுகர முடியவில்லை.
'நாவலிருந்து'....
"... வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில்
கூட்டங்களே ... உயரத்தில் உலவுவதால் நீங்கள் உயர்ந்து
விடுவதில்லை. நாங்களோ மரங்கள் மண்ணின் சுவாச
வேர்கள் பேய்க்காற்றுவீசும் வேளையிலும் புயல் இரைகின்ற
போதிலும் மின்னல் இடி முழக்கம் அச்சுறுத்தும் சமயங்களிலும்
போராடி மடிவதற்கும் அப்புனித பாதையிலே புன்முறுவல்
பூத்த முகத்தோடு சிந்தும் சிவப்பு இரத்தத்தில் தோய்ந்து
வீழ்வதற்கும் ... எழுவதற்கும் ஆயிரமாயிரம் போராளிகளைத்
தந்த பள்ளிமுனைத்தாயகத்தின் போராளிகளே புறப்படுங்கள்..!
நம் கட்சியைக் காப்பாற்ற இது நமது உரிமை இது
நமது கடமை ...இது நமது ஒற்றுமை ... ஒன்றை மட்டும்
உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள் ... சிங்களக் கட்சிகளின்
கால் தூசியாக ஒட்டிக்கிடக்கும் முதுகெலும்பற்ற 'முக்கியத்
தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களே ... இந்தப்
பள்ளிமுனைக் கர்பலாக் களத்திலிருந்து, உங்களுக்கு இந்த
இஸ்லாமியக் கட்சித் தலைமைத்துவம் பகிரங்கச் சவால்
விடுக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத்
தேர்தலில் இம்மாவட்டத்தில் ஆளும் ஐ.என்.பி. கட்சியால்
ஒரு சபையைக் கூட வெல்ல முடியாது ....”
"நாரே தக்பீர் ...''
செய்லான் ஹாஜியார் எடுத்துக்கொடுக்க -"அல்லாஹு அக்பர்!" கூடடம் அதிர்ந்தது. தலைவர்தொடர்ந்தார்.--
Hanees Mohamed #HH
ஜிப்ரி ஹாஸன்
ஆழ்ந்த புனைவுத் தன்மை
ஜிப்ரி ஹாஸன்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.
அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான ஆய்வுத் தன்மையான கட்டுரை தேவை என்று நினைக்கிறேன். அவரது படைப்புலகம் சார்ந்த விரிவான மதிப்பீடுகள், விமர்சனங்கள் நமது இலக்கிய வெளியில் முன்வைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
கொல்வதெழுதல் 90 எனும் அவரது இந்நாவல்அதிகம் பேசப்பட்டதும்,
தமிழக அரசின் 1000 பிரதிகளுக்கான அரச ஆணை பெற்றதுமாகும்.00
ஏ.பீர்முகம்மது
கொல்வதெழுதுதல் 90 ...
யதார்த்தத்தின் உயிர்ப்பு
ஏ.பீர்முகம்மத்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖
கண்ணிவெடி¸ குண்டு வெடிப்பு¸ டயர் எரிப்பு¸ ஹர்த்தால்¸ ஆட்கடத்தல்¸ சுற்றி வளைப்பு என்று தொன்னூறுகளில் முஸ்லிம் பிரதேசமெங்கும் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பின்னணியில் போர்க்கால இலக்கியமாக அரசியல் பேச எழுந்ததுதான் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல்90 என்ற நாவலாகும். முஸ்லிம் குரல் என்னும் வாராந்த ஏட்டிலே பத்தொன்பது அத்தியாயங்கள் கொண்டதாக 2003 இல் தொடராக வெளிவந்தது. பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்நாவல் 2013 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் கொல்வதெழுதுதல்90 என்ற தலைப்பில் நூலுருப் பெற்றது.
தொன்னூறுகளின் முஸ்லிம் அரசியலைப் பேசிய இந்நாவலின் கதைச் சுருக்கம் இதுதான்.
கதையின் நாயகன் முத்துமுகம்மது. விடுதலைப் போராட்டக் குழுக்களின் கெடுபிடி நடவடிக்கைகளைக் கண்டும் கேட்டும் திரிந்த இளைஞன். இலங்கை இஸ்லாமியக் கட்சியின் நடவடிக்கைகளால் கவரப்பட்டவன். தனக்கிருந்த மலேசிய வாசுதேவன் குரலைப் பயன்படுத்தி பாடல்களை அரசியல் கூட்டங்களில் பாடி வந்தான். இலங்கை இஸ்லாமியக் கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்த முத்து முகம்மது கட்சியின் இளைஞர் அணித் தலைவனாக நியமிக்கப்பட்டான். இதற்கிடையே தனது மாமி மகள் மைமூனாமீது தீராத காதல் கொண்டு எப்படியும் அவளைத் திருமணம் செய்யத் தீர்க்கமான முடிவெடுத்தான். மைமூனாவும் இணங்கியே இருந்தாள்.
மைமூனாவுக்கு வயசுக்கு வந்த மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.
மைமூனாவை அரபு நாட்டுக்கு அனுப்பி உழைத்தால்தான் தனது குடும்பம் உருப்படும் என்று கைம்பெண்ணான தாய் முடிவுக்கு வருகிறாள். அடிக்கடி வந்துபோன வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சப்பு சுல்தானும் இந்த முடிவுக்கு காரணமாகிறான்.
மைமூனா வெளிநாடு போகக் கூடாது என்று முத்து முகம்மது ஒற்றைக் காலில் நிற்க நிலைமையை அநுசரித்து மைமூனா வெளிநாடு போகிறாள். சப்பு சுல்தான் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றிக் கெடுத்தவன். மைமூனா பேசி முத்து முகம்மதுக்கு அனுப்பிய ஒலிநாடாவில் தன்னைக் கெடுத்த கதையையும் சொல்லியிருந்தாள். அரசியலிலும் முத்து முகம்மதின் எதிரி. எனவே சப்பு சுல்தானை கொலை செய்ய முயற்சிக்கிறான். இன்னுமொரு இளைஞனும் தனது தாயின் மரணத்துக்குக் காரணமான சப்பு சுல்தானை கொலை செய்யத் திட்டமிடுகிறான்.
சப்பு சுல்தானின் சடலம் புலிகள் கொலை செய்ததான கடிதத்தோடு ஆலமரத்தில் தொங்கியது. ஊரில் சிலர் சப்புவின் கொலைக்கு முத்து முகம்மதுவைச் சுட்டியே பேசத் தொடங்கினர் .ஆனால் இஸ்லாமிய கட்சித் தலைவர் எம்.எச்.எம்.இஸ்ஹாக் முன்னிலையில் முத்துமுகம்மது தன்னை நிரபராதி என நிரூபித்தான். உயிராபத்தில் இருந்து கட்சித் தலைவரைக் காப்பாற்றிய வேளையில் முத்து முகம்மது மூன்று கை விரல்களை இழந்தவன் என்பதனால் வயற்சேனை பிரதேச தவிசாளர் பதவியை தலைவரின் பரிசாகப் பெற்றவன். பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் நடவடிக்கைகளில் தலைவர் திருப்தி கண்டதனால் வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் முத்து முகம்மதுக்குப் பரிசாக வழங்கினார்.அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்த மைமூனாவை நாட்டுக்கு அழைத்து திருமணமும் நடத்தி வைத்தார்.
முத்து முகம்மது மைமூனா தம்பதிகள் ஊர் மக்களின் பலத்த வரவேற்புகளுக்கு மத்தியில் பள்ளிமுனைக் கிராமத்தில் வந்திறங்கினார்கள் என்று கதை முடிகின்றது.
கால வெளி
காலம் காலமாக ஒரே குட்டையில் ஊறிய கட்சிகளுக்கு புள்ளடி போட்டுப் பழக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களிடையே அரசியல் என்பது வேறு துருவம் நோக்கி நகரத் தொடங்கியது .ஆயுத கலாசாரம் ஒரு பக்கமும் இராணுவ நடவடிக்கை¸ இந்திய அமைதிப்படை என்று இன்னுமொரு பக்கமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசம் தொன்னூறுகளில் கொதிநிலையில் இருந்தது. இந்தச் சு10ழ்நிலையை நாவல் துல்லியமாகச் சொல்லி நகர்கின்றது. குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மூலை முடுக்கெல்லாம் ஆதரவு திரளத் தொடங்கிய காலம்.தேநீர் கடைகளிலும் வீதிச் சுவர்களிலும் வீட்டு முகப்பிலும் ஒட்டப்பட்ட தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் என்று தனது வழமையான நகைச்சுவை கலந்த பாணியில் ஆசிரியர் இதனைப் பதிவு செய்கிறார்.
அரசியல் கூட்டங்களில் முஸ்லிம் பெண்கள் முதன்முதலாகப் பங்குபற்றத் தொடங்கிய காலமும் அதுதான். முத்து முகம்மது "பொன்மானைத் தேடி நான் பூவோடு வந்தேன்" என்று மலேசிய வாசுதேவன் குரலில் அரசியல் மேடையில் பாடியதும் அங்கிருந்தவாறே அவனது கண்கள் மைமூனாவை பெண்களுக்கு மத்தியில் தேடியதாகச் சொன்னதும் நாவலின் காலத்தைச் சுட்டி நிற்கின்றன.
நாவலில் நிரம்பி வழியும் பயனிலைச் சொற்கள் கதைநிகழ் காலத்தை குறி சுட்டுக் காட்டுகின்றன.
கள வெளி
பள்ளிமுனைக் கிராமத்தில் ஆரம்பிக்கும் நாவலின் களம் பூமரச் சந்தி¸ பசரிச்சேனை ¸பாலடி அவ்லியா சியாரம்¸நெய்னார் கடை¸ கொழும்பில் யூகே லொஜ்¸ தலைவரின் இல்லம் என்று தலைநகரம்வரை செல்கின்றது. "இலங்கையின் தேசப் படத்தில் பள்ளிமுனைக் கிராமத்தைத் தேடினால் காணமாட்டோம். இந்தப் போர்க் காலத்தில்கூட அடர்த்தியான மரத்தோப்புகளைப் போர்த்திக் கொண்டு இனம் புரியாத ஒரு அமைதியாகப் பசுமைக்குள் ஒளிந்திருந்தது பள்ளிமுனைக் கிராமம்" என்று நகர்கிறார் நாவலாசிரியர் ஆர்.எம்.நௌஸாத்.
பள்ளிவாசலும் மைதானத்துடன் கூடிய ஒரு முஸ்லிம் மகா வித்தியாலயமும் கிறவல் பாதைகளும் பள்ளிமுனைக் கிராமத்தின் அடையாளங்கள். பெரிய பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியாரிடம் மட்டுமே கொரளா கே.ஈ 20 கார் இருந்தது. முத்து முகம்மது செத்தைக் குடிசையில் வாழ்ந்தான்.
பாத்திர வெளி நாவலில் முத்து முகம்மது மட்டுமே முக்கிய பாத்திரம். மைமூனா. சப்பு சுல்தான்¸ இஸ்லாமியக் கட்சித் தலைவர் எம்.எச்.எம்.இஸ்ஹாக்¸ பள்ளித் தலைவர் செய்லான் ஹாஜியார்¸ நெய்னார்¸ தாடி மாஸ்டர்¸ மொட உதுமான்¸ தம்பி யாசின் என்று பல பாத்திரங்கள். நாவலில் கதாநாயகன் முத்து முகம்மது பின்வருமாறுதான் நமக்கு அறிமுகமாகிறான்.
பள்ளிமுனை இளைஞர் அணித் தலைவர் பதவியை அவன் பெற்றிராத காலம்.
“மேடையில் ஒரேயொரு ஆளாக முத்து முகம்மது நின்று கொண்டிருந்தான். தலையில் கட்சித் தொப்பி.மஞ்சள் பச்சை சேட்டுடன் கட்சிச் சாறன். கையில் புதிதாக கடிகாரம். மார்பில் தலைவரின் சிறிய படம்." "முத்து முகம்மது பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய கம்பீரமான குரல் வளம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது. அரசியல் மேடைகளிலும் வைபவங்களிலும் மலேசியா வாசுதேவனின் குரலிசையில் பாடுவதும் அறிவிப்பதும் அவனது சிறப்பம்சம் ..... பொழுதுபோக்கு தொழில் எல்லாமே ....." என்றுதான் முதலாவது அத்தியாயத்தில் ஆசிரியர் முத்து முகம்மதை அறிமுகம் செய்கிறார். கொழும்பிலே தலைவருடன் சில காலம் தங்கிய முத்து முகம்மது பல மாற்றங்களை தன்னுள் உள்வாங்கிக் கொண்டான்.
இதுபற்றியும் நாவல் நமக்குச் சொல்கிறது. "இப்போதெல்லாம் சிங்களம் இயல்பாகவே விளங்கியது.ஆங்கிலம் கூடக் கொஞ்சமாய் பேசவும் முடிந்தது.தலைநகரின் வீதிகளும் சந்து பொந்துகளும்கூடப் பரிச்சயமாயின. கட்சி அலுவலகம்¸ பாராளுமன்றம்¸வங்கி¸பொலிஸ்நிலையம்¸தொலைபேசி¸தொலைமடல்¸அரசஅதிகாரிகள்¸ஏசி¸காலி முகத்திடல்¸ரூபவாஹினி¸ஊனக் கைகளால் பஜ்ரோ வாகனம்கூட ஓட்ட¸ எல்லாம் பழக்கமாகின. முத்து முகம்மதின் பள்ளிமுனைக் கிராமத்தனம் பூரணமாகத் தொலைந்து விட்டிருந்தது. அவனுக்குள் ஒரு நகர இளைஞன் உருவாகி இருந்தான்"
நாவலின் இறுதி அத்தியாயத்தின் இறுதிப் பந்தி இது. “வாகனத்தின் கதவுகளை ஒரு பொலிஸ்காரன் பவ்வியமாகத் திறந்துவிட¸ நெருக்கியடித்த சனங்களை அதிரடிப்படை வீரர்கள் தள்ளி வழி சமைக்க¸ வாகனத்திலிருந்து தனது இளம் மனைவி சகிதமாக இறங்கி வந்து கொண்டிருந்தார். இலங்கை இஸ்லாமியக் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பள்ளிமுனை இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளரும் தற்போதைய திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜனாப் எம்.முத்து முகம்மது அவர்கள் ........ "நாரே தக்பீர் " “அல்லா{ஹ அக்பர்"
முத்து முகம்மதின் முழுமையான ஆளுமை இவ்வாறுதான் நாவலில் மேற்கிளம்பியது. நாவலின் ஒரே முழுமையான பாத்திரம் முத்து முகம்மதுதான்.ஏனையவை துணைப் பாத்திரங்களே.
புனைவு மொழி
நாவலில் ஆசிரியரின் மொழிப் பிரயோகத்திலும் கதாபாத்திரங்களின் பிரதேச பேச்சுமொழி வடிவமே மேலோங்கிக் காணப்படுகிறது. அதனையும் உயிர்ப்புடன் எழுதும் வல்லமை ஆசிரியருக்கு சித்தித்துள்ளது
முஸ்லிம் அரசியலின் இயலுமை பாமரத்தனத்தில் அல்லது படிப்பறியாத மக்களின் கைகளில் தொன்னூறுகளில் இருந்துள்ளது என்பதை நாவல் கோலம் போட்டுக் காட்டியுள்ளது. அக்காலத்திய அரசியல் அப்படித்தான் இருந்தது. யதார்த்தத்தையே நாவல் பேசியுள்ளது.
நூலின் நுழைவாயிலில் கிடந்த சுருக்கெழுத்து என்ற நாவலாசிரியரின் குறிப்பிலே யாவும் கற்பனையுமல்ல யாவும் நிஜமுமல்ல என்ற வாசகம் இதனையே ருசுப்படுத்துகின்றது.
தீரன் ஆர்.எம். நௌசாத்தின் நட்டுமை(2007)¸கொல்வதெழுதுதல்90(2013)ஆகிய இரண்டு நாவல்களும் கதை நிகழ்காலத்தை சேதாரமில்லாமல் முன்வைக்கின்றது. காலத்தை கலவரப்படாமல் செப்பமாகக் காட்டும் நாவல்களே வெற்றி பெறுகின்றன. கள வெளி¸ பாத்திரவார்ப்பு¸ புனைவு மொழி¸ மானிட வாழ்வியல்¸ கலாசாரம் மற்றும் பண்பாடுகளின் பிரசன்னம்¸ கற்பனையிலும் யதார்த்தம் மேலோங்கியிருத்தல் போன்ற நாவலின் கூறுகளை பெருமளவில் சிறப்பாகக் கையாண்டமையால் இரண்டு நாவல்களும் பலராலும் பேசப்பட்டன. நட்டுமையின் கனதி கொல்வதெழுதுதல்90 இலும் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இரண்டு நாவல்களிலும் குறிப்பாக நட்டுமையில் கலாசார பண்பாட்டுக் கூறுகள் வெளிப்பட்ட அளவுக்கு விவசாயக் குடிகளின் சமூகம் சார்ந்த வாழ்வியல் பேசப்படவில்லை என்பது நட்டுமையின் செழுமையில் மறைந்து போகின்றது.
இன்னும் பல புதினங்கள் ஆர்.எம் .நௌஸாத்திடமிருந்து வெளிவர வேண்டுமென்பதே தமிழிலக்கியத்தின் தேவையாகும்.00