வாசகர்களின் உணர்வலைகளைத் தூண்டும் விதத்தில் ஒரு சிறந்த நாவல்
கொல்வதெழுதுதல் 90
--------------------------------------
ஏயெம்மே நிஸாம் is with R.M. Nowsaath.
April 26 ·
காதலுணர்வை யுத்தகால தளத்தினூடே கிராமிய மணம் சூடி வாசகர்களுக்கு ஒப்புவித்திருக்கின்றார்
நாவலாசிரியர் R.M. நௌஸாத் அவர்கள்.
கிழக்கிலங்கையின் சிறந்த ஆளுமை எழுத்தாளர்களுள் இவருக்கென்று ஒரு தனியிடமுண்டு. சாய்ந்தமருது என்ற முஸ்லிம் பாரம்பரிய பிரதேசத்தில் பிறந்த இவர் ஒரு நாவலாசிரியராக மட்டுமல்லாமல் சிறுகதை, எழுத்தாளராகவும் கவிஞராகவும் விமர்சகராகவும் இலக்கியத் தளத்தில் தனக்கென ஓரு தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டவர். தபாலதிபராகப் பணியாற்றிய R,M.நௌஸாத் அவர்களால் வாசகர்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட நாவாலே கொல்வதெழுதுதல் 90.
1990 பயங்கரவாதம் உச்சமடைந்த காலப்பகுதியில் அதிலும் முஸ்லீம்களை நோக்கி தமிழ் பயங்கரவாதம் மையப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, சமூக இருப்பை உறுதிப்படுத்தித் தருவதாக அரசியல் போராட்டமென்ற அதிவேகக் குதிரையில் இஸ்லாமியக் கட்சி என்ற நாமத்துடன் களமிறங்கிய கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுள் முத்து முகம்மது என்ற கிராமத்து இளைஞனின் கதையே கொல்வாதெழுதுதல் 90
2003ம் ஆண்டு M.பௌஸரின் வெளியீடான முஸ்லீம் குரல் எனும் சஞ்சிகையில் இதழ் 10 இல் இருந்து இதழ் 29 வரை இந்த நாவல் தொடர் கதையாகப் பிரசுரிக்கப்பட்டு பின்னர் செவ்வை பார்க்கப்பட்டு 2013 இல் நாவலாக வெளியிடப்பட்டதாகவும் பின்னர் 2017 இல் மீள் பதிப்பு செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
திருமலை ஷகியின் "நிறங்கள் உதிர்க்கும் இரவு" கவிதை நூல் வெளியீடு செய்யப்பட்ட காலப்பகுதியில் ஷகியால் 17 புத்தகங்கள் எனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதிலொரு படைப்பே இந்நாவல். புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் வாசிப்பின்பால் எனக்கிருந்த அதீத ஈடுபாடு நாடு வந்ததும் ஏற்பட்ட இறங்கு நிலை காரணமாக இதுவரை வாசிக்கப்படாதிருந்து. தற்போதைய நாடு தழுவிய ஊரடங்கு நிலை கொல்வதெழுதுதல் 90 ஐ என் கையில் திணித்துவிட்டது.
பள்ளிமுனை கிராமத்தில் பிறந்த முத்து முகம்மது எனும் உலகம் தெரியாத இளைஞன் தனது மாமியின் மகளான மைமுனா மீது கொண்ட அதீத காதல், இதற்கிடையே முஸ்லீம்களைப் பாதுகாக்க வந்த இஸ்லாமியக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு போரிளியாக பிரகடனப்படுத்திக்கொண்டு கட்சித் தொண்டனாகவும் இஸ்லாமியக் கட்சி இளைஞர் அணித் தலைவனாகவும் பரிணமிக்கின்றான். வறுமை நிலை காரணமாக மைமுனாவை வெளிநாடு அனுப்ப அவளது தாய் முயற்சிப்பது முத்து முகம்மதிற்கு எள்ளளவேனும் பிடிக்கவில்லை என்பதுடன் சப்பு சுல்தான் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் முட உதுமானின் மனைவியை வெளிநாடு செல்வதாகக் கூட்டிச் சென்று நாசம் செய்துவிட்டதாக நம்புவதேயாகும். ஒரு கட்டத்தில் மைமுனாவின் உம்மா மைமுனாவை வெளிநாடு அனுப்பும் விடயதை உத்தியோகபூர்வமாக முத்து முகம்மதிடம் சொல்ல அதற்கு அவன் தன் எதிர்ப்பை வெளியிட்ட போது மைமுனாவையும் அவளின் தங்கைகளையும் உன்னால் பார்த்துக்கொள்ள முடியுமா என்ற அவளது வினாவில் வாயடைத்துப் போகிறான்.
பின்னர் ஒருவாறாக முத்து முகம்மதை இணக்கப்படுத்தி அவனையும் மைமுனா வெளிநாடு செல்லும்போது அவனது மாமி அழைத்துச் செல்கிறாள். முத்து முகம்மதைக் கூட்டி வந்ததில் சப்பு சுல்தானுக்கு இஸ்டமில்லையாயினும் அவனுக்கு உணவு தங்குமிட வசதி என்பவற்றை செய்து கொடுக்கிறான். இதற்கிடையில் கிழக்கு கொழும்பு உட்பட பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. கொழும்பு சென்றிருந்த முத்து முகம்மதை இஸ்லாமிய கட்சித் தலைவரிடம் அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி அவனை சாந்தப்படுத்துகிறான் சப்பு சுல்தான். காலையில் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டுமெனவும் தயாராகுமாறும் கூறிவிட்டுச் செல்கிறான். சப்பு சுல்தான். முத்து முகம்மதையும் மைமுனாவையும் பிரிவு வாட்டி வதைத்தது, சற்று நேரத்தில் பதட்டத்துடன் ஒடிவந்த சப்பு சுல்தான். இறுதி நேரத்தில் எம்.பி. இன் சைன் தேவைப்படுவதாகவும் முத்து முகம்மது நினைத்தால் இஸ்லாம் கட்சி தலைவரிடம் இருந்து பெறலாமென அவன் கூற, மைமுனாவின் உம்மாவும் முத்து முகம்மதிடம் கோரிக்கை விடுக்கிறாள். சப்பு சுல்தான் மீது முத்து முகம்மதுக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் இந்த நிலையில் எதையும் காட்டிக்கொள்ளாமல் சப்பு சுல்தானோடு ஆட்டோவில் செல்கிறான் அவனுடன் மைமுனாவின் தம்பி யாசினும் செல்கிறான். இடையில் சைன் வாங்க வேண்டிய விண்ணப்பத்தை தவறவிட்டுவிட்டதாகக் கூறி ஆட்டோவில் இருந்து இறங்கி வேறொரு ஆட்டோவில் செல்கிறான். முதன்முதல் கொழும்பு வந்த முத்து முகம்மது மொழியும் தெரியாமல் வழியும் தெரியாமல் தான் தங்கியிருந்த லொட்ஜின் முகவரிகூட தெரியாமல் திகைத்து நிற்க தமிழ் பேசும் பொலிசார் ஒருவரின் உதவியுடன் இஸ்லாம் கட்சி தலைவரின் இல்லம் செல்கிறான்.
அவரிடம் தனக்கு நடந்த துன்பங்களைச் சொல்லி கதறியழுகிறான். உடனே தனது இணைப்பாளரையும் பொலிசாரையும் அவன் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்புகிறார் இஸ்லாம் கட்சி தலைவர். சப்பு சுல்தானுக்கு பொலிசார் அடிக்கின்றனர். இதைக்கண்ட மைமுனாவின் உம்மா MP யின் சைன் வாங்கித் தருவதாக ஏமாற்றி விட்டதாகக் கூறி முத்து முகம்மதுக்கு ஏசுகிறாள். மைமுனாவும் விமானம் ஏறிய நிலையில் பித்துப் பிடித்தவன் போலாகிறான். செய்வதறியாது இஸ்லாம் கட்சி தலைவரின் இல்லத்தில் தஞ்சமடைகின்றான். மைமுனா இல்லாத பள்ளிமுனையில் தனக்கு அலுவலில்லை என்ற வைராக்கியத்துடன் நகர வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்கின்றான். பள்ளிமுனையில் கிணற்றுத்தவளையாக இருந்த முத்து முகம்மது நகரமயப்படுத்தப்படுகின்றான். சிங்களம் பேசக் கற்றுக்கொள்கிறான்,
அலுவலக கடமைகளை விளங்கிக் கொள்கின்றான். மொத்தத்தில் நகர இளைஞனாகவே மாறிவிடுகின்றான். இஸ்லாம் கட்சி தலைவரின் நம்பிக்கைக்குரியவனாகவும் அவரின் கருமங்களை மேற்கொள்பவனாகவும் அவருடனயே வாகனத்தில் சென்று அவரின் கருமங்களை மேற்கொள்ளும் பொறுப்பை வகித்துவந்தான். ஒருமுறை தலைவருடன் வாகனத்தில் செல்லும்போது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சாராதியும் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டதுடன் தலைவர் காயங்களின்றி மயிரிழையில் உயிர் தப்பினார். தலைவரைப் பாதுகாத்த முத்து முகம்மது தனது மூன்று விரல்களையும் இழந்து நாடு தழுவியரீதியில் பிரபல்யமடைகிறான்.
அத்துடன் தலைவரின் நெஞ்சில் சிம்மாசனமிட்டு குடியிருக்கிறான். பிரதேச சபை தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்தது, பள்ளிமுனைக்கு செயிலான் ஹாஜியாரின் எதிர்ப்பிற்கு மத்தியில் முத்து முகம்மதை பிரதேச சபை தேர்தலுக்கு நிறுத்தி சேமனாக ஆக்கினார் இஸ்லாம் கட்சி தலைவர். இது தனது உயிரைக் காப்பாற்றியமைக்கான முதற் பரிசு எனவும் அறிவித்தார். இந்நிலையில் மைமுனாவின் காதலும் சப்பு சுல்தானின் மாறாப் பகையும் உள்மனதை ஆக்கிரமித்திருந்தது. அவன் ஜ.என்.பி. கட்சியின் வேட்பாளரும்கூட, இக்காலகட்டத்தில் சப்பு சுல்தானால் முத்து முகம்மதுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வெளிடப்பட்டிருப்பதாகவும் அதில் முத்து முகம்மது மூன்று நாள் மைமுனாவை லொட்ஜில் வைத்திருந்ததாகவும் தலைவருக்கும் மைமுனாவைக் கொடுத்து சேமனாகியதாகவும் பொட்ட நெயினார் கூறினான். இதனைக் கேட்ட முத்து முகம்மது ஆவேசப்படுவதை உணர்ந்த நெயினார் அவனை ஆசுவாசப்படுத்தி முட உதுமானின் மகன் அன்வர் தனது தாய் தற்கொலை செய்ய காரணமாக இருந்த சப்பு சுல்தானை பழிவாங்கு நோக்கில் இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும், மறுபுறம் அவன் செய்த குற்றங்களுக்காக பொலிசார் தேடுவதாகவு குறிப்பிட்டு இந்தப் பிரச்சினையை இனிமேல் தலையில் எடுக்க வேண்டாமெனவும் கூறி முத்து முகம்மதை ஆசுவாசப்படுத்தினான்.
சேமனாக இருந்து செய்ய வேண்டிய கருமங்களைச் செய்து வந்த வேளை முத்து முகம்மதின் தாயார் காலமானார். இறுதிக்கிரிகைகளை முடித்துவிட்டு தாயின் வீட்டில் தங்கியிருந்த அவன் அங்கு ஒரு கெசட் இருப்பதைக் காண்கிறான், அது மைமுனாவால் அனுப்பப்பட்டது, கொழும்பில் முத்து முகம்மதையும் யாசினையும் கழற்றிவிட்டு வந்த சப்பு சுல்தான் லொட்ஜுக்கு வந்து சோடாவில் மயக்க மருந்து போட்டு தன்னை நாசம் செய்துவிட்டதாகவும், இவ்விடயம் வெளியே தெரிந்தால் முத்து முகம்மதையும் யாசினையும் கொழும்பில் வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தான் எவரிடமும் சொல்லாமல் விமானம் ஏறியதாகவும் கூறி கதறியழுதாள்.
இதனைக் கேட்ட முத்து முகம்மது, சப்பு சுல்தானைக் கொல்ல வேண்டுமென கங்கணங்கட்டி இவன் தொடர்பான தகவல்களை அறிவதற்காக சப்பு சுல்தானின் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பாடசாலையொன்றில் மைமுனாவின் தம்பி யாசினுக்கு அப்பாடசால்யின் காவலாளியாக வேலை வாங்கிக் கொடுக்கின்றான் அவனும் பழைய கோபத்தை மனதில் வைத்து தனது உளவுக் கடமையை கச்சிதமாக நிறைவேற்றினான். ஒரு மழை நாளில் சப்பு சுல்தான் ஊர் வந்திருப்பதாகவும் வீட்டில் ஒருவருமில்லை என்ற தகவலைச் சொன்னான். சப்பு சுல்தானின் இறுதி யாத்திரைக்கான நேரத்தைக் குறித்துவிட்டு மழைத்தூறலின் மத்தியில் கிறிஸ் கத்தியொன்றை இடுப்பில் சொருகியவாறு சப்பு சுல்தானின் வீட்டுக்குச் சென்றான், வெளியே பைசிக்கள் ஒன்று இருப்பதைக் கண்டு ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான் சற்று நேரத்தில் வீட்டினுள் இருந்து இருவர் வேகமாக வெளியே வந்து சைக்கிளில் ஏறிச் சென்றனர். பின்ர் முத்து முகம்மது சப்பு சுல்தானின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தான் அங்கு கண்ட காட்சி அவனைத் தூக்கிவாரிப்போட்டது.
சப்பு சுல்தான் கொலை செய்யப்பட்டு கட்டிலில் கிடந்தான் அவனது வாய்க்குள் ஆணுறுப்பு திணிக்கப்பட்டிருந்தது. செய்வதறியாது திகைத்த முத்து முகம்மது தலை தெறிக்க வீடு நோக்கி ஓடினான். நிம்மதியின்றி தவித்தான், அவனையறியாமலேயே தூங்கிவிட்டான், தாடி மாஸ்டர், ஜாபிர், யாசின் ஆகியோரின் ஆரவாரத்தில் முத்து முகம்மது நித்திரை கலைந்தான், பின்னர் சுதாகரித்துக் கொண்டு பொலிஸாருடன் இணைந்து இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்களைச் செய்தான், இதற்கிடையில் இக்கொலையை முத்து முகம்மது செய்ததாக எண்ணி பொட்ட நெயினார் அம்பாறை விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த தலைவரிடம் சொல்வதற்காகச் சென்றிருப்பதை அறிந்து அவனும் ஜாபிர், தாடி மாஸ்டர் சகிதம் அங்கு சென்றான், தலைவரின் காலடியில் கதறியழுதான் இவ்விடயம் தொடர்பாக தலைவர் குர்ஆனைக் கொடுத்து சத்தியம் கேட்க அவன் நடந்த உண்மைகளைக் கூறினான். அதனை தலைவர் ஏற்றுக் கொண்டார்.
அதேவேளை சேமன் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி முத்து முகம்மதையும் ஏனையோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் தலைவர். முத்து முகம்மது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தலைவரின் கட்டளையை ஏற்றுக்கொண்டான். அதேகணம் ஆறு பிரதேச சபைகளையும் கைப்பற்ற முடியாமல்விட்டால் தனது MP பதவியை இராஜினாமா செய்வதாகக் கூறியதற்கமைய வெற்றிடமாக இருந்த தலைவரின் MP பதவியை முத்து முகம்மதிற்கு வழங்கி மைமுனாவையும் திருமணம் முடித்து வைத்தார். இதுதான் நாவலின் சுருக்கம்.
இக்கதை முத்து முகம்மது, மைமுனாவின் கிராமத்து காதல் கதையாக இருந்தாலும் போர்ச் சூழலின் தாக்கம் கதைக்கு அணிசேர்ப்பதாய் அமைந்துள்ளது. ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற பிரம்மை வாசகரிடத்தில் ஏற்படுத்துகின்றது. கதையின் கோர்ப்பு காதல், அரசியல், பயங்கரவாதம் என பன்முகத்தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது. கிழக்கின் உரை நடையை கதைசொல்லி லாவகமாகக் கையாண்டிருக்கிறார். புறச் சூழலை தனக்கே உரித்தான சொற்பதங்கள் கொண்டு நளினப்படுத்தியிருக்கின்றார். முதன் முதலாக கொழும்பு செல்லும் முத்து முகம்மதின் உள்ளக்கிடக்கையை சொற்களால் படம் பிடித்துக் காட்டியவிதம் கதை சொல்லியின் மனவெழுச்சியை படம்பிடித்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. மொத்தத்தில் வாசகர்களின் உணர்வலைகளைத் தூண்டும் விதத்தில் ஒரு சிறந்த நாவலை வாசகர்களுக்கு ஒப்புவித்துள்ளார் R.M.நௌஸாத் அவர்கள்.
000