உயிரோட்டமான நாவல்
"கொல்வதெழுதுதல் 90"
1990 களின் போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாகவும் கிழக்கிலங்கையின் முஸ்லிம் கிராமங்களின் கையறு நிலையையும், விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளையும் மிகவும் எளிமையான முறையில் கண் முன்னே கற்பனை ரீதியாக உணர வைக்கும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஆர்.எம்.நௌஸாத் என்ற எழுத்தாளரின் ஓர் படைப்பு.
அன்றைய காலப் பகுதியில் ஏராளமான ஆயுதக் குழுக்கள், காரணமில்லாத கொலைகள், கண்ணிவெடி, மிதிவெடி, ஹர்த்தால், கடையடைப்பு, ஆள்கடத்தல்,பணிமுடக்கம், காட்டிடக்கொடுப்பு போன்ற
பக்க விளைவுகள் மக்களை வாட்டிக் கொண்டிருந்தது.
கிழக்கிலங்கையின் பள்ளிமுனைக் கிராமத்தைச் சேர்ந்த முத்துமுகம்மது
இலங்கை இஸ்லாமிய கட்சியின் தீவிர ஆதரவாளன்.
பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் மேடைகளில் முழங்கும் "போராளிகளே புறப்படுங்கள்" என்ற கோஷங்கள் பூவரச மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் தலைவரின் படங்கள், மஞ்சள் பச்சை வர்ண கொடிகள், சோடனைகள், மின்விளக்குகள் என்று 90களின் அரசியல் மேடை அமைப்பு அற்புதமானவை.
இதற்கும் மேலாக தலைவர் வருகையை ஐம்பத்து நான்காவது தடவையாக ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்யும் முத்துமுகம்மது.
முத்துமுகம்மதின் முறைப்பெண்ணான "மைம்னா"வை வறுமை காரணமாக வெளிநாடு செல்ல அவளின் தாயார் கட்டாயப்படுத்துகிறாள்.
தங்கை மார்களுக்கு வீடு கட்டுவதற்கு வெளிநாடு செல்ல கொழும்பு சென்ற மைம்னா சப்பு ஏஜன்சியால் கொழும்பு லொஜ்ஜில் வைத்து கற்பழிக்கப்படும் காட்சிகள் எதார்தமாக அமைந்துள்ளது.
அதன் பின்னர் கல்வியறிவோ சிங்களமோ தெரியாத முத்துமுகம்மது
ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் தலைவரின் உயிர் காக்கிறார்.
இதனால் பள்ளிமுனை பிரதேச சபைத் தேர்தலில் பல்வேறு தர்ப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி
தலைவரால் முத்து முகம்மது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.
தேர்தல் கால மரபுகள் பழிவாங்கல்கள் ஏமாற்றங்கள் காதலியின் பிரிவு
என்று உயிரோட்டமாக நாவலின் கதை நகர்கிறது.
00